ALAM SEKITAR & CUACA

நாட்டில் வெப்ப நிலை மார்ச் மாதம் மத்திய பகுதி வரை நீடிக்கும்- வானிலை ஆய்வுத் துறை கணிப்பு

கோலாலம்பூர், பிப் 15- நாடு தற்போது வடகிழக்கு பருவமழையின் மூன்றாம் கட்டத்தில் உள்ளது. மார்ச் மாதம் மத்திய பகுதி வரை இந்நிலை நீடிக்கும் என்பதால் தீபகற்ப மலேசியாவில் குறிப்பாக நாட்டின் வட பகுதியில் மழை குறைவாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், வழக்கத்திற்கு மாறாக கடுமையான வறட்சி நிலை இவ்வாண்டில் ஏற்படாது என்று கருதப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் ஜைலான் சைமன் கூறினார்.

நீண்ட காலத்திற்கு நீடிக்கும் குறைவான மழைப் பொழிவு காரணமாக தற்போது குறிப்பாக இரவு வேளைகளில் வெப்பம் நிறைந்த சீதோஷண நிலை காணப்படும். தற்போது ஏற்பட்டுள்ள வெப்பமான வானிலை ஒவ்வொராண்டும் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை வழக்கமாக ஏற்படும் வெப்பமான வானிலையின் ஒரு பகுதியே என்று அவர் சொன்னார்.

பிப்ரவரி மாதம் பதிவான அதிகப்பட்ச வெப்பத்தின் அளவு கடந்தாண்டு பதிவானதை விட குறைவாகும். இம்மாதம் ஆக அதிகமாக 36.2 பாகை வெப்ப நிலை பதிவானது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 37.4 பாகை வெப்பம் பேராக் மாநிலத்தின் கோலகங்சார் வானிலை ஆய்வு மையத்தில் பதிவானது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளில் தற்போது காணப்படும் கடுமையான வெப்ப நிலை ஏப்ரல் மாதம் மத்திய பகுதிக்குப் பிறகு தணியத் தொடங்கும் என்றும் அவர் சொன்னார்.

தற்போதைய வறட்சி நிலையின் போது மக்கள் நீர் விரயத்தை தடுப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திறந்த வெளி தீயிடல் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்பதோடு வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்து நீரை அதிகம் பருக வேண்டும். வானிலை ஆய்வுத் துறையும் நாடு முழுவதும் வானிலை மாற்றத்தை அணுக்கமாக கண்காணித்து வரும் என்றார் அவர்.


Pengarang :