ECONOMYNATIONAL

நகைகளை அடகு வைக்கும் போது கவனம் தேவை- போலீசார் எச்சரிக்கை

ஷா ஆலம், பிப் 16– நகைகளை அடகுக் கடைகளில் அடகு வைக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்படும்படி பொதுமக்களை  காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நடப்புச் சூழலில் பணத்தை தேடுவதில்  பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்னையை பயன்படுத்தி அடகுக் கடைகளும் லைசென்ஸ் இன்றி செயல்படும் சட்டவிரோத அடகுக் கடைகளும் பொதுமக்களை ஏமாற்றுவதற்குரிய வாய்ப்பு உள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஜைனுடின் யாக்கோப் கூறினார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் அமலுக்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு பொருளாதார ரீதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக பலர் தங்கள் வசமுள்ள நகைகளை அடகு வைக்கும் சூழ்நிலையும் உண்டாகிறது என்று அவர் சொன்னார்.

அத்தகைய சூழ்நிலையை எதிர்நோக்கும் பொதுமக்கள் தாங்கள் நகைகளை அடகு வைக்கும் போது சம்பந்தப்பட்ட அடகுக் கடைகள் அரசாங்கத்திடமிருந்து முறையான அனுமதியைப் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நகைகளை அடகு வைப்பது தொடர்பான எந்த நடவடிக்கையும் லைசென்ஸ் பெற்ற அடகு கடைகளில் நேரடியாக மேற்கொள்ள வேண்டும். இணையம் வாயிலாக நகைகளை அடகு வைப்பதை அவர்கள் முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

இது போன்ற மோசடிச் செயல்கள் தொடர்பில் இதுவரை தமது தரப்பு எந்த புகாரையும் பெறவில்லை எனக் கூறிய அவர், எனினும், இத்தகைய மோசடிகள் நடைபெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார்.

வர்த்தக குற்றங்கள் நிகழாதிருப்பதை உறுதி செய்வதில்  காவல் துறையும் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும். அதே சமயம் பொதுமக்களும் வீண் செலவுகளைத் தவிர்த்து சிக்கனமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.


Pengarang :