தொழில் முனைவோருக்கு உதவ 2.5 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், பிப் 19- கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் வாயிலாக ஸ்கிம் நியாகா டாருள் ஏசான் (நாடி) திட்டம் உள்பட மூன்று வர்த்தக திட்டங்களை அமல்படுத்த சிலாங்கூர் அரசு 2 கோடியே 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் கடந்த 10ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்ட நாடி திட்டத்திற்கு தொழில்முனைவோரை பதிவு செய்யும் இயக்கம் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹிஜ்ரா எனப்படும் யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அமைப்பின் 20 கிளைகளின் வாயிலாக இந்த விண்ணப்பங்களைப் பெறும்  பணி மேற்கொள்ளப்படுவதாக இத்திட்டங்களின் மேம்பாடு தொடர்பான மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் அறிக்கை கூறுகிறது

சிறிய அளவில் வியாபாரத்தை தொடக்க விரும்புவோருக்கு உதவும் வகையிலான இத்திட்டத்திற்கு மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. தகுதி உள்ளவர்கள் இத்திட்டத்தின் மூலம் 1,000 வெள்ளி முதல 5,000 வெள்ளி வரை கடனுதவி பெற முடியும்.

இதுதவிர, இ-டாப்போர் இலக்கவியல் திட்டத்திற்கு  ஒரு கோடி வெள்ளியும் சிறு மற்றும் சில்லறை மின் விநியோக இலக்கவியல் திட்டத்திற்கு 50 லட்சம் வெள்ளியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வணிகர்கள் இலக்கவியல் மூலம் தங்கள் வர்த்தகத்தை பெருக்கிக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அரசாங்கம் இவ்விரு திட்டங்களையும் கோ டிஜிட்டல் என்ற பெயரில் ஒருங்கிணைத்தது.


Pengarang :