ஷா ஆலம் கவுன்சிலர்களுடன் இந்திய உணவக உரிமையாளர்கள் சந்திப்பு

ஷா ஆலம், பிப் 19–  ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள இந்திய உணவக உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்களான வீ. பாப்பாராய்டு மற்றும் யுவராஜா ஆகியோருடன் சந்திப்பு நடத்தப்பட்டது.

மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்க ஏற்பாட்டில் கடந்த    17-2-2021 புதன்கிழமை தாமான் ஸ்ரீமூடா மெலோர் ஜெயா உணவகத்தில்  நடைபெற்ற இச்சந்திப்பில் 25 உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

சங்கத் தலைவர் கோவிந்தசாமி சுரேஷ் தலைமையேற்ற  இக்கூட்டத்தை சங்க மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கி.தில்லை நாதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாக  வழி நடத்தினார்.

சட்டப்பூர்வமாக அல்லது சட்டவிரோதமாக செயல்படும் சாலையோர உணவு கடைகளால் உணவகங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, உணவக பணியாளர்களின் தங்குமிட விவகாரம் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளால் உணவகங்களுக்கு ஏற்படும் சிக்கல் குறித்து இச்சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தில்லைநாதன் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடுமையான வர்த்த பாதிப்பை எதிர் நோக்கியுள்ள தங்களுக்கு ஆங்காங்கே தோன்றியுள்ள சாலையோர உணவுக் கடைகள் மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதை உணவக உரிமையாளர்கள் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

அன்றாட வருமானத்திற்காக பொதுமக்கள் உணவுக் கடைகளை திறப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், உணவகங்களுக்கு அருகிலோ அல்லது எதிரிலோ இல்லாமல் குறைந்தது 2 கிலோமீட்டருக்கு அப்பால் வியாபாரம் நடத்தினால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

பொருளாதார பாதிப்பை எதிர்நோக்கியுள்ள சாதாரண மக்கள் மீது கரிசனம் காட்டி அவர்கள்  சாலையோரங்களிலும் வீட்டின் முன்புறத்திலும் வியாபாரம் செய்ய அனுமதிக்கும் ஊராட்சி மன்றங்கள், பெரும் முதலீட்டில் வியாபாரத்தை தொடங்கி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பல மாதங்களாக வருமானம் இன்றி பரிதவிக்கும் உணவகங்கள் மீதும் சிறிது கருணை காட்ட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அந்நியத் தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தருவதற்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்ட விவகாரம் மற்றும் எஸ்.ஓ.பி. நிபந்தனைகளை கடைபிடிக்கத்தவறும் உணவகங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை  குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

உணவக உரிமையாளர்களின் மனக்குமுறலை கேட்டறிந்த கவுன்சிலர் பாப்பாராய்டு மற்றும் யுவராஜா ஆகியோர் இவ்விவகாரத்தை மாநகர் மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்று உரிய தீர்வு காண்பதற்கு முயல்வதாக கூறினர்.


Pengarang :