ECONOMYNATIONAL

பி.கே.பி. உத்தரவை மீறுவோருக்கு 10,000 வெள்ளி அபராதம்- இன்று முதல் சட்டம் அமல்

கோலாலம்பூர், மார்ச் 12– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பிறப்பிக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) மீறுவோருக்கு பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் கூறினார்.

2021ஆம் ஆண்டு (திருத்தம் செய்யப்பட்ட) தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அவசர காலச்சட்டம்  நேற்று பின்னிரவு 12.01 மணிக்கு அமலுக்கு வந்ததாக அவர் சொன்னார்.

இந்த சட்டத்தின் கீழ் எஸ்.ஒ.பி. உத்தரவுகளை மீறுவோருக்கு முன்பு விதிக்கப்பட்ட 1,000 வெள்ளி அபராதம் 10,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் அல்லது மக்களிடமிருந்து அரசாங்கம் அதிக பணத்தை வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அபராதத்  தொகை அதிகரிக்கப்படவில்லை. மாறாக நோய்க் கிருமிகள் எங்கும் உள்ளன என்பதால் அதற்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் மட்டுமே  இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நாம் பின்பற்றாவிட்டால் முன்பை விட நிலைமை மோசமாகும் அபாயம் எந்நேரத்திலும் ஏற்படலாம் என்று அவர் தெரிவித்தார்.

தவறிழைத்தவர்களுக்கு வழங்கப்படும் அபராத அறிக்கையில் 1,000 வெள்ளி என குறிப்பிடப்பட்டிருக்கும். எனினும், மாவட்ட சுகாதார அதிகாரியின் விவேகத்திற்குட்பட்டு உண்மையான அபாரதத் தொகை நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கூடல் இடைவெளியைக் கடைபிடிக்காதது, முகக் கவசம் அணியாதது, உடல் உஷ்ணத்தை அளவிடும் கருவியை வர்த்தக ஸ்தாபனங்கள் கொண்டிராதது போன்ற குற்றங்களுக்கு குற்றப்பதிவுகளை வழங்கும் அதிகாரம் மட்டுமே போலீசாருக்கு உள்ளது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :