ECONOMYNATIONAL

ரசிகர்கள் முன்னிலையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி

கோலாலம்பூர், மார்ச் 19– வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி தொடங்கி ரசிகர்கள் முன்னிலையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த தேசிய பாதுகாப்பு மன்றத்தின் நுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் வழி விளையாட்டரங்குகளில் நடைபெறும் மலேசிய லீக் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை ரசிகர்கள் நேரில் காண்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் இடர் மதிப்பீட்டுக் குழு ஆகிய தரப்பினர் வழங்கிய எஸ்.ஒ.பி. நடைமுறை தொடர்பான பரிந்துரைகளை பரிசீலித்தப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள இடங்களில், 20 ஆயிரம் பேர் அமர வசதி உள்ள அரங்குகளில் பத்து விழுக்காட்டு இருக்கைகள் அளவுக்கு அல்லது 2,000 பேருக்கு மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள பகுதிகளில் 25 விழுக்காட்டு இருக்கைகள் அளவுக்கு அல்லது 8,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என நிபந்தனை  விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

எனினும், எந்தவொரு போட்டிக்கும் ரசிகர்களை அனுமதிப்பது இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சின் முடிவைப் பொறுத்தது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

ரசிகர்களைக் கையாள்வதில் பின்பற்றப்படும் நடைமுறைகளின் ஆக்கத்தன்மை குறித்து மதிப்பீடு செய்வதற்கு மலேசிய லீக் கால்பந்து போட்டியின் இரு ஆட்டங்கள் சோதனைக் களங்களாக விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போட்டியின் போது ரசிகர்கள் அரங்கில் நுழைவது மற்றும் வெளியேறுவது உள்பட அனைத்து அம்சங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட  நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சு, தேசிய  பாதுக்காப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கண்காணிப்பர் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :