ECONOMYSELANGOR

முதியோர், பூர்வக்குடியினர் தடுப்பூசி பெற ‘இம்முனிசெல்‘ திட்டம்  உதவும்- மந்திரி புசார் தகவல்

பூச்சோங், ஏப் 4- மூத்த குடிமக்கள், பூர்வக்குடியினர் உள்பட அனைத்து தரப்பினரும் கோவிட்-10 தடுப்பூசியைப் பெறுவதை உறுதி செய்வதில் ‘இம்முனிசெல்‘ எனப்படும் சிலாங்கூர் மாநில எல்லை கடந்த கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் உதவும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இணையத்தை பயன்படுத்தும் திறன் இல்லாத அல்லது கைப்பேசியில் உரிய செயலிகளைக் கொண்டிராத முதியவர்கள் மற்றும் பூர்வக்குடியினரை இந்த திட்டம் பிரதான இலக்காக கொண்டிருக்கும் என்று அவர் சொன்னார்.

சுமார் 30 விழுக்காட்டு மாநில மக்கள் கைப்பேசியைப் பயன்படுத்தும் திறனைக் கொண்டிருக்கவில்லை என்று புள்ளிவிபரத் துறையின் ஆய்வுகள் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய தரப்பினர் அழைப்புகளை விடுப்பது, பெறுவது மற்றும் வாட்ஆப் எனப்படும் புலனத்தை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு மட்டும் கைபேசியை பயன்படுத்துகின்றனர் என்று இந்த இம்முனிசெல் திட்டத்தை இங்கு தொடக்கி வைத்த போது அவர் தெரிவித்தார்.

இந்த இம்முனிசெல் திட்டத்தில் பதிந்து கொண்டவர்கள் கியூ.ஆர். குறியீட்டை பெறுவார்கள். இந்த குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தடுப்பூசியைப் பெறுவதற்கான தேதியை அவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றார் அவர்.

நேற்று வரை நாட்டிலுள்ள 2 கோடியே 67 லட்சம் மலேசியர்களில் சுமார் 76 லட்சம் பேர் தடுப்பூசியைப் பெறுவதற்கு மைசெஜாத்ரா செயலி வழி பதிந்து கொண்டுள்ளனர்.


Pengarang :