NATIONALSELANGOR

சிலாங்கூரில் 2019 முதல் 550 குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கைது

ஷா ஆலம், ஏப் 10- சிலாங்கூர் மாநில போலீசார் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 550 குண்டர் கும்பல் உறுப்பினர்களைக் கைது செய்துள்ளனர். கேங் 08, கேங் 21, கேங் 24 மற்றும் கேங் 36 குண்டர் கும்பல்களைச் சேர்ந்த அந்த  உறுப்பினர்கள் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்  டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

போதைப் பொருள் விற்பனை பகுதி  மற்றும் இடங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடர்பில் சண்டையிட்டுக் கொண்டது, வர்த்தக நிறுவன உரிமையாளர்களிடம் மிரட்டி பணம் பறித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்கள் பிடிபட்டதாக அவர் சொன்னார்.

இது தவிர, கொலை முயற்சி, கலவரத்தில் ஈடுபட்டது, சுடும் ஆயுதங்களை வைத்திருந்தது, கொள்ளை மற்றும் கடுங் குற்றங்கள் தொடர்பான 175 சம்பவங்களிலும் இவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 20 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட மலேசியர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கேங் 24 புக்கிட் ராஜா குண்டர் கும்பலின் எஞ்சிய உறுப்பினர்களைத் தேடும் நடவடிக்கையில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், இது குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு பணம், பாதுகாப்பு, அதிகாரம், செல்வாக்கு என பல்வழிகளில் ஆசை வார்த்தை காட்டி மாணவர்கள் உள்பட பலரை புதிய உறுப்பினர்களாக சேர்த்து வருகிறது என்றார் அவர்.

புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு அக்கும்பல் இலக்காக கொண்டுள்ள சில பள்ளிகளை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரத்தில்  பதின்ம வயது முதல் 50 வயது வரையிலான சுமார் 100 உறுப்பினர்களை அக்கும்பல் உறுப்பினர்களாக கொண்டுள்ளதாக  கூறப்படுகிறது. 


Pengarang :