ECONOMYSELANGOR

மக்களிடையே மறைந்திருக்கும் நோய்த் தொற்றைக் கண்டு பிடிக்கவே இலவச பரிசோதனை- மந்திரி புசார்

ஷா ஆலம், மே 7– மக்களிடையே மறைந்திருக்கும் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கண்டு பிடித்து கட்டுப்படுத்தும் நோக்கில் சிலாங்கூர் அரசு இலவச  பரிசோதனை இயக்கங்களை மேற்கொண்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தேடுதல், கண்டுபிடித்தல், சோதித்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகிய நான்கு கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்றைத் தணிப்பதற்காக அந்நோய்த் தொற்று உள்ளவர்களை அடையாளம் காணும் பணியில் சிலாங்கூர் மாநில பொது சுகாதார நடவடிக்கைத் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, தினசரி இரு சட்டமன்றத் தொகுதிகள் என்ற அடிப்படையில் இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநில மக்களுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை நடத்தவுள்ளோம் என்றார் அவர்.

தொடக்கமாக நாளை செமினி மற்றும் காஜாங் தொகுதிகளில் இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், மே 9ஆம் தேதி சுங்கை ராமால் மற்றும் பலாக்கோங் தொகுதிகளில் நடைபெறும் என்றார்.

மாநிலத்தில் புதிய நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஆக்ககரமான திட்டங்களை மேற்கொள்வது அவசியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியும். ஆகவே, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த சோதனை இயக்கத்தில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நோய்த் தொற்றை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் இந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியும் என்று அவர் சொன்னார்.


Pengarang :