MEDIA STATEMENT

இன்று  தொடங்குகிறது பி.கே.பி. 3.0 – எதிர்காலத்தை தீர்மானிக்கும் இரு வார பொது முடக்கம்

இன்று  தொடங்குகிறது பி.கே.பி. 3.0 – எதிர்காலத்தை தீர்மானிக்கும் இரு வார பொது முடக்கம்

 

கோலாலம்பூர், மே 25- கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பி.கே.பி. 3.0 எனப்படும் மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதில் இந்த இருவார காலம் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது.

நோய்த் தொடர்பு சங்கிலியை துண்டிப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாதம் 19ஆம் தேதி முதல் தினசரி 6,000க்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்களை நாடு பதிவு செய்து வருகிறது. கடந்த ஞாயிறன்று இந்த எண்ணிக்கை 6,976 ஆக உயர்வு கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வூஹானில் கடந்தாண்டு தோன்றிய இந்த நோய்த் தொற்று தொடர்ந்து உச்சம் பெற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. நம் நாட்டைப் பொறுத்த வரை அந்நோயின் கோரத்தாண்டவம் இன்னும் அடங்கியபாடில்லை.

மலேசியாவில் இதுவரை 2,300 பேர் அந்நோய்க்கு பலியாகியுள்ளனர். ஆக சமீபத்தில் அதாவது நேற்று மொத்தம் 61 பேரை இந்நோய் பலி கொண்டுள்ளது.

நாட்டிலுள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 91 விழுக்காட்டு கட்டில்கள் நிரம்பிவிட்ட நிலையில் மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதை தவிர்க்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி நம்மை பிறரிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகும். அண்மையில் நோன்பு பெருநாளின் போது அரசாங்கம் பிறப்பித்த உத்தரவை மீறி விருந்தினர் வீடுகளுக்குச் சென்று உபசரிப்புகளில் கலந்து கொண்டதால் நோய்த் தொற்று அதிகம் பரவியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, நமக்குள் சுயக்கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு தனித்திருப்பதன் மூலம் இந்த இரு வார காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வர முடியும்.

 

 


Pengarang :