MEDIA STATEMENTNATIONAL

சாலைத் தடுப்புச் சோதனைகளில் 3,300 இராணுவ வீரர்கள்

கோலாலம்பூர், ஜூன் 2- முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் போது நாடு முழுவதும் சாலைத் தடுப்புச் சோதனைகள்,  காவல் சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதில்  போலீசாருக்கு துணையாக 3,300 இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஓப்ஸ் பெனாவார் எனும் இந்த நடவடிக்கையில் கடற்படை, ஆகாயப்படை மற்றும் தரைப்படையை  உள்ளடக்கிய மூன்று பிரிவுகளும் பங்கேற்கும் என்று ஆயுதப் படைகளின் தளபதி டான்ஸ்ரீ அப்பாண்டி புவாங் கூறினார்.

நோய்த் தொற்றுக்கான தாக்கம் அதிகம் உள்ள குறிப்பாக கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகள், தனிமைப்படுத்தும் மையங்கள், பி.கே.ஆர்.சி. சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் காவல் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இப்பிரிவினர் ஈடுபடுவர் என்று அவர் சொன்னார்.

ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கையின் கீழ் பாதுகாப்பு சார்ந்த அனைத்து படைப் பிரிவினருடன் இணைந்து தரை மற்றும் ஆகாய  எல்லைகளை கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 12,285 வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறுக்கு வழிகள் உள்பட பல்வேறு வழிமுறைகளை கையாண்டு நாட்டிற்குள் நுழைய முயலும் அந்நிய நாட்டினரைத் தடுக்கும் பணியில் இவர்கள் ஈடுபடுவர் என்று அவர் சொன்னார்.

 


Pengarang :