தடுப்புக் காவல் மரணங்கள்- மகஜரை பெற உள்துறை அமைச்சு முன்வரவில்லை- குணராஜ் வேதனை

கிள்ளான், ஜூன் 3- தடுப்புக் காவலில் கணபதி மற்றும் சிவபாலன் மரணமடைந்தது தொடர்பில் சுயேச்சை விசாரணை குழுவை அமைக்கோரும் மனுவை உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் என்.ஜி.ஒ. அமைப்புகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது குறித்து செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ வேதனை தெரிவித்தார்.

முறையாக முன் அனுமதி பெற்றிருந்த போதிலும் மகஜரை பெற யாரும் வராததோடு யாரும் உள்ளே நுழையாவண்ணம் அமைச்சின் முன்வாசமூடப்பட்டிருந்தது தங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்ததாக அவர் சொன்னார்.

இது தவிர, அனுமதி அட்டையைப் பயன்படுத்தி அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் மகஜரை ஒப்படைப்பதற்கான எங்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் வேறு வழியின்றி அந்த மஜரை அமைச்சின் அலுவக வாயிலிலே வைத்து விட்டு வர வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

 அமைச்சருக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் அதிகாரிகளை அனுப்பியாவது அந்த மகஜரை பெற்றிருக்கலாம். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எங்கே போனது அவர்களின் பணி நெறி? மக்களின் நலனுக்காக பணி செய்யும் முறை இதுதானா? என குணராஜ் கேள்வியெழுப்பினார்.

‘மக்களின் சுதந்திரம் மற்றும் நீதி குறித்து எங்களுக்கு கவலையில்லை. எங்கள் விருப்ப படிதான் வேலை செய்வோம்‘ என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது என்றார் அவர்.

மக்கள் கொடுத்த நம்பிக்கை மற்றும் அதிகாரத்தின் அடிப்படையில் நாட்டு பிரஜைகளின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் பாடுபடுகிறோம். மக்கள் சமமாக நடத்தப்படுவதையும் அவர்களின் உரிமை பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யும் கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த மகஜரை கொடுப்பதற்காக தம்முடன் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, செலயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் ஜீ கின், தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் சானி ஹம்சான் ரவாங் உறுப்பினர் சுவா வேய் கியாட் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்துறை அமைச்சுக்கு வந்திருந்ததாக அவர் தெரிவித்தார்


Pengarang :