HEALTHNATIONALPBT

தடுப்பூசியை கொள்முதல் செய்வதில் உள்ள நிர்வாக நடைமுறைகளை அகற்றுவீர்- அரசாங்கத்திற்கு கோரிக்கை

ஷா ஆலம், ஜூன் 27– நோய்த் தொற்றிலிருந்து மக்களை விடுவிப்பதற்கு ஏதுவாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை  விரைந்து மேற்கொள்ள வேண்டிய தற்போதைய நிலையில் தடுப்பூசியை சொந்தமாக கொள்முதல் செய்வதில் காணப்படும் நிர்வாக நடைமுறைகளை அகற்றும்படி அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசியைக் கொள்முதல் செய்யும் விஷயத்தில் நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்துவதற்கான தருணம் இதுவல்ல என்று  சுங்கை பாஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமது இம்ரான் தாஹிர் கூறினார்.

மக்களுக்குச் செலுத்துவதற்காகத்தான் அந்த தடுப்பூசிகள் வாங்கப்படுகின்றன. நாம் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டால் நோய்த் பாதிப்பிலிருந்து நாம் விரைவாக வெளியேற முடியும் என்றார் அவர்.

பொருளாதார ரீதியில் வலுவாக உள்ள காரணத்தால் சிலாங்கூர் மாநிலத்தினால் சொந்தமாக தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்காக 20 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படும் தகவலை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 9ஆம் தேதி  கித்தா சிலாங்கூர் 2.00 உதவித் திட்டத்தை அறிவித்த போது வெளியிட்டிருந்தார்.


Pengarang :