கோவிட்-19: பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் 10 குழுக்கள்- கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாடு

ஷா ஆலம், ஜூலை 5- கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வருமானம் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் காண்பதற்காக கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி பத்து குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் தொகுதி சேவை மையப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இக்குழுக்கள் உதவி தேவைப்படுவோரை  அடையாளம் காண்பதற்காக ரோந்துப் பணியை மேற்கொள்ளும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

வெள்ளைக் கொடி ஏற்றியவர்கள், ஏற்றாதவர்கள் உள்பட பாதிக்கப்பட்டத் தரப்பினரை அடையாளம் காணும் பணியில் ஒவ்வொரு குழுவும் ஈடுபடும். உடனடியாக உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக ஒவ்வொரு குழுவுக்கும் 10 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

வெள்ளைக் கொடி ஏற்றிய ஆறு குடும்பங்கள் உள்பட சுமார் 100 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளை இன்று வழங்கினோம் என்று நேற்று சிலாங்கூர் கினிக்கு வழங்கிய பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

வசதி உள்ள குடும்பங்கள் வசதியற்ற குடும்பங்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக “ஒரு குடும்பத்திற்கு ஏற்பாட்டு ஆதரவு“ எனும் இயக்கத்தை தாங்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கணபதிராவ்  சொன்னார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமக்களும் உதவி நல்குவதை இத்திட்டத்தின் மூலம் உறுதி செய்ய முடியும். அவர்கள் நேடியாகவும் உதவி செய்யலாம் அல்லது தொகுதி சேவை மையத்தையும் அணுகலாம் என்றார் அவர்.

 


Pengarang :