HEALTHNATIONAL

நோய்த் தொற்று- பாதிக்கப்பட்டவர்களில் 98 விழுக்காட்டினர் ஒன்றாம், இரண்டாம் கட்ட  நோயாளிகள்

கோலாலம்பூர், செப் 9- நாடு முழுவதும் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கான 19,733 நோயாளிகளில் 97.8 விழுக்காட்டினர் அல்லது 19,304 பேர் ஒன்றாம் அல்லது இரண்டாம் கட்ட பாதிப்பை (குறைவான நோய்த் தாக்கம் உள்ளவர்கள்) எதிர்நோக்கியவர்கள் என்று சுகாதார அமைச்சு கூறியது.

எஞ்சிய 429 பேர் (2.2 விழுக்காடு) மூன்றாம் (நுரையீரல் அழற்சி), நான்காம்(ஆக்சிஜன் உதவி தேவைப்படுவோர்) மற்றும் ஐந்தாம் (செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டவர்கள்) கட்டத்தில் உள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று நோயினால் பீடிக்கப்பட்ட 19,304 பேரில் 12,483 பேர் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக கூறிய அவர், அவர்கள் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றவர்கள் அல்லது இன்னும் அறவே தடுப்பூசி பெறாதவர்களாவர் என்றார்.

மேலும், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ள 429 நோயாளிகளில் 331 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்கள் அல்லது இன்னும் தடுப்பூசி பெறாதவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு ஏதுவாக இன்னும் தடுப்பூசி பெறாதவர்கள் விரைந்து அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

அதேசமயம்,  நோய்த் தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்கு  நாம் அனைவரும் தொடர்ந்து எஸ்.ஒ.பி. நடைமுறைகளை கடைபிடித்து வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்  கொண்டார்.

 


Pengarang :