நெல் வயல்களில் உரமிடும், மருந்து தெளிக்கும் பணிகளுக்கு டிரோன் சாதனம்- சிலாங்கூர் அரசு வழங்கியது

ஷா ஆலம், செப் 10- நெல் பயிர்களின் தரத்தையும் உற்பத்தியையும் அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்காக சிலாங்கூர் மாநில அரசு 75,000 வெள்ளி மதிப்பிலான டிரோன் சாதனத்தை சுங்கை புசார், சிம்பாங் லீமாவில் உள்ள வாவாசான் தானி பெர்ஹாட் கூட்டுறவுக் கழகத்திற்கு வழங்கியுள்ளது.

அங்குள்ள 500 ஹெக்டர் நெல் வயலில் உரமிடுவது மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள இந்த சாதனை பெரிதும் துணை புரியும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த டிரோன் சாதனத்தின் பயன்பாடு இப்பகுதிக்கு புதியதல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் இங்கு வந்த போது அப்போதே இந்த கூட்டுறவுக் கழகம் சொந்தமாக டிரோன் சாதனத்தை மலிவான விலையில் வாங்கி பயன்படுத்தி வந்தது. அந்த சாதனத்தின் பயன்பாடும் ஆக்ககரமான பலனைத் தந்தது என்றார் அவர்.

சிறப்பாக செயல்படும் அந்த கூட்டுறவுக் கழகத்திற்கு பரிசாக வழங்கும் நோக்கில் மேலும் ஒரு டிரோன் சாதனத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். இந்த சாதனம் 20 லிட்டர் உரம், அல்லது பூச்சிக் கொல்லி மருந்து ஏற்றிக் கொண்டு 15 நிமிட இடைவிடாமல் பயணிக்கும் திறனைக் கொண்டது என்று அவர் சொன்னார்.

இந்த உதவியின் வாயிலாக விவசாய நடவடிக்கைகளை நவீனப்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அக்கூட்டுறவுக் கழக அலுவலகத்திற்கு வருகை புரிந்த போது அவர் தெரிவித்தார்.


Pengarang :