ECONOMY

வட கிள்ளானில் 12,000  இளையோர் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்

கிள்ளான், அக் 12- இங்குள்ள தேசிய உயர் இடைநிலைப்பள்ளியில் ஜாலான் மேரு, கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் செயல் பட்டு வரும் தடுப்பூசி மையத்தில் வட கிள்ளான் பகுதியைச் சேர்ந்த  பெரும்பாலான இளையோர் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இங்கு 13 முதல் 17 வயது வரையிலான 12,000 மாணவர்கள் இதுவரை தடுப்பூசியைப் பெற்றுள்ள நிலையில் 12 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கி மேற்கொள்ளப்படும் என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சம்சுல் இப்ராஹிம் கூறினார்.

நாளொன்றுக்கு 1,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் ஆற்றலை இந்த மையம் கொண்டுள்ளது. இந்த  எண்ணிக்கை அதிகமானதாக இருந்தாலும் தடுப்பூசி இயக்கம் இதுவரை எந்த இடையூறுமின்றி சீராக நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

நேற்று இங்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியார்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக வாகனங்களில் இருந்தவாறு தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பும் இந்த மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதுவரை ஆறு மாணவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தியுள்ளனர் என்றார்.

பிக் ரெமாஜா எனப்படும் இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக சிலாங்கூரில் 399 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  மாநில சுகாதாரத் துறை கடந்த மாதம் அறிவித்திருந்தது.


Pengarang :