பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட 700 பேருக்கு மனநல ஆலோசக சேவை

ஷா ஆலம், அக் 13- கோவிட்-19 கோவிட்-19 பெருந் தொற்று தொடங்கியது முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சிலாங்கூர் மாநில சஹாபாட் இணைய ஆலோசக மையம் சுமார் 700 மன நல ஆலோசக சேவைகளை வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட  மக்களுக்கு தொடக்கக் கட்ட மற்றும் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு  வாட்அப் புலனம் மற்றும் டெலிகிராம் போன்ற இணைய ஊடகங்கள் வாயிலாக ஆலோசக சேவை வழங்கப்பட்டதாக அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரினாத்தோ நான்சி கூறினார்.

இந்த ஆலோசக சேவையை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம். மன நல பாதிப்புக்கு ஆளானவர்கள் எங்களிடம் உதவி பெறலாம் என்று நேற்றிரவு மீடியா சிலாங்கூர் வாயிலாக நடைபெற்ற விவாத நிகழ்வில் அவர்  தெரிவித்தார்.

நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறியதைத் தொடர்ந்து இம்மாதம் தொடக்கத்திலிருந்து இந்த ஆலோசக சேவை இங்குள்ள பி.கே.என்.எஸ். காம்ப்ளெக்ஸ், சிப்பாங், செலாயாங் மற்றும் சுபாங் ஜெயாவில் நேரடியாக நடத்தப்படுகிறது என்றார் அவர்.

பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்திப்பதன் மூலம் அவர்களின் நடவடிக்கை, எதிர்வினையாற்றும் விதம் மற்றும் உணர்வுகளை அறிந்து அதற்கேற்றவாறு ஆலோசக சேவைகளை வழங்க முடிகிறது என் அவர் சொன்னார்.

இந்த மையத்தில் அங்கீகாரம் பெற்ற 30 மனநல ஆலோசகர்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மனநலப் பிரச்னைக்கு ஆளானோருக்கு இந்த சஹபாட் மையம் உரிய ஆலோசக சேவையை வழங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆகஸ்டு மாதம் கூறியிருந்தார்.

 


Pengarang :