2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுற்றது – 3.23 கோடி பேர் பங்கேற்பு

கோலாலம்பூர், நவ 1- நாட்டில் 2020 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இந்த கணக்கெடுப்பில் 3 கோடியே 26 லட்சம் மக்கள் தொகையில் 99.2 விழுக்காட்டினர் அல்லது 3 கோடியே 23 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்கு மத்தியிலும் இந்த உயரிய எண்ணிக்கை பதிவாகியுள்ளது  வரவேற்கத்தக்க ஒன்றாக விளங்குகிறது.

கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி  நேற்று வரை 95 லட்சம் குடியிருப்புகள் மற்றும் 81 லட்சம் குடியிருப்பாளர்கள் மீது கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக 2020ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு ஆணையர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மாஹிடின் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பொதுமக்களை நேரில் சந்திக்கும் திட்டம் பல முறை ரத்து செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பின் போது 330 கணக்கெடுப்பு பணியாளர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானதோடு அவர்களில் ஒருவர் உயிரிழந்தார் என அவர் குறிப்பிட்டார்.

கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 3 கோடியே 23 லட்சம் பேரில் 23.6 விழுக்காட்டினர் இணையம் மற்றும் தொலைபேசி அழைப்பின் வாயிலாக பேட்டி காணப்பட்ட வேளையில் எஞ்சியோரடம் நேரடியாக சந்திப்பு நடத்தப்பட்டது என்றார் அவர்.

இணையம் வாயிலாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 24 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறிய அவர், கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட இணைய கணக்கெடுப்பில் 0.5 விழுக்காட்டினர் மட்டுமே கலந்து கொண்டனர் என்றார்.


Pengarang :