MEDIA STATEMENTPBTSELANGOR

மதிப்பீட்டு வரியை உயர்த்த காஜாங் நகராண்மைக் கழகம் திட்டம்

காஜாங், நவ 1- வரும் 2023 ஆம் ஆண்டில் மதிப்பீட்டு வரியை உயர்த்த காஜாங் நகராண்மைக் கழகம் திட்டமிட்டுள்ளது.

மாற்றியமைக்கப்படாத வீடுகளுக்கு  20 வெள்ளிக்கும் மேற்போகாத கட்டணத்தை இந்த உத்தேச மதிப்பீட்டு வரி உயர்வு கொண்டிருக்கும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

 கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் இங்கு மதிப்பீட்டு வரி மறுஆய்வு செய்யப்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பில் ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹானுடன் மூன்று வாரங்களுக்கு முன்னர் பேச்சு நடத்தப்பட்டது என்றார் அவர்.

வரும் 2023 ஆம்  ஆண்டில் மறுஆய்வு செய்வதற்கும் மாற்றப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ள பரிந்துரைகளில் இதுவும் அடங்கும். எனினும் மாநில அரசின் உத்தரவைப் பொறுத்து இதன் அமலாக்கம் அமையும் என்று அவர் சொன்னார்.

இங்கு இன்று நடைபெற்ற நிகழ்வில்,மதிப்பீட்டு வரியைச் செலுத்துங்கள், பரிசு வெல்லுங்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

காஜாங் நகராண்மைக் கழக நிர்வாகத்தை வழிநடத்துவதில் இந்த மதிப்பீட்டு வரி உயர்வு பெரிதும் துணை புரியும் என்றும் நஜ்முடின் நம்பிக்கைத் தெரிவித்தார். 


Pengarang :