1,200 மாற்றுத் திறனாளிகளுக்கு வெ.500 உதவித் தொகை வழங்கும் பணி முற்றுப் பெற்றது

ஷா ஆலம், நவ 12- மாநிலத்திலுள் 1,200 மாற்றுத் திறனாளிகளுக்கு 500 வெள்ளி உதவித் தொகை வழங்கும் பணி கடந்த மாத இறுதியுடன் முடிவுக்கு வந்ததாக யாவாஸ் அறவாரியம் கூறியது.

கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு 500 வெள்ளி வழங்கும் அத்திட்டம் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி முதல் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்பட்டதாக அனிஸ் எனப்படும் சிலாங்கூர் சிறப்பு சிறார் துறையின் தலைவர் டேனியல் அல்-ரஷிட் கூறினார்.

விண்ணப்பதாரர்களின் மனுக்கள் முழுமையாக இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் ஒரு பகுதியினருக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் இந்நிதி சேர்க்கப்பட்ட வேளையில் எஞ்சியோருக்கு ரொக்கமாக வழங்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இந்த உதவித் திட்டத்திற்கு மாற்றுத் திறனாளிகளிடமிருந்து நாங்கள் 7,000 விண்ணப்பங்களைப் பெற்றோம். எனினும், வரையறைக்குட்பட்ட நிதி ஒதுக்கீட்டைக் கொண்டிருந்த காரணத்தால் விரைவாக மற்றும் முழுமையான விபரங்களுடன் மனுக்களை அனுப்பியவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள் பொருள்களை விற்பது, உடம்பு பிடி நிலையத்தில் வேலை செய்வதன் மூலம் வருமானத்தை  ஈட்டி வருகின்றனர். கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் வருமானம் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு இந்த நிதியுதவி ஓரளவு துணை புரியும் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் வருமானம் பாதிக்கப்பட்ட மற்றும் வேலை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதற்காக மாநில அரசு 600,000 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார். 


Pengarang :