இனம் பேதம் கடந்து அனைவரையும் ஈர்க்கும் இந்திய கலைஞர்கள்

ஷா ஆலம், நவ 17- மக்களை ஈர்க்கும் துறைகளில் முக்கியமானது கலைத்துறையாகும். இத்துறை மொழி, இனம், சருமத்தின் நிறம் பார்க்காது. படைப்புகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அனைவரது பார்வையையும் நிச்சயம் ஈர்க்கும்.

மலேசியாவிலும் அனைத்து இன மக்களையும் வசப்படுத்தும் வகையிலான மலாய் படைப்புகளை எழுத்து வடிவிலும் பாடல் வடிவிலும் இந்திய மற்றும் சீன படைப்பாளிகள் பலர் வெளியிட்டுள்ளனர்.

அவர்களை இச்சமூகம் பாகுபாடின்றி ஏற்றுக் கொண்டுள்ளது. அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளதோடு ஆத்மார்த்த நாயகர்களாகவும் ஏற்றுக் கொண்டுள்ளது. அவர்களில் நாடகக் கலைஞர்களான ஜேனட் கூ மற்றும் நகைச்சுவை நடிகர் பரம் ஆகியோரை குறிப்பிடலாம்.

இம்மாதம் 16 ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட அனைத்துலக சகிப்புத் தன்மை தினத்தை முன்னிட்டு மலாய்க்காரர் அல்லாத 10 கலைஞர்களின் சாதனையை பட்டியலிட்டுள்ளார் செய்தியாளர் அபிஷ் ரெட்சுவான். அவர்களில் இந்திய கலைஞர்களை நாம் இங்கு பார்ப்போம்.

எலிகேட்ஸ்

இக்குழு கடந்த 1968 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. டத்தோ டேவிட் ஆறுமுகமும் அவரின் இளைய சகோதரர் டத்தோ லோகநாதனும் இக்குழுவின் பிரதான பாடகர்களாக விளங்கினர்.

டேவிட் ஆறுமுகத்தின் மற்றொரு சகோதரர் சண்முகம், கூ எங் ஆன், ஜோன்சன் கூ, சில்லி ஹோக் ஆகியோர் இக்குழுவின் மற்ற கலைஞர்கள் ஆவர். இக்குழுவின் நிர்வாகியாக ரோனி சியாங் காய் சோக் பணியாற்றினார்.

இக்குழுவினர் பாடிய பல மலாய்ப் பாடல்கள் மக்கள் மத்தியில் வெகுவாக   பிரபலமடைந்தது. 1986 ஆம் ஆண்டில் முதன் முறையாக நடத்தப்பட்ட பாடல் திறன் வெற்றியாளர் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இக்குழுவினர் சிறந்த கலைக்குழுவினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அச்சப்பன்

அச்சப்பன் என அனைவராலும் அழைக்கப்படும் சாமிநாதன் இரத்தினம் 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் பிரசித்தி பெற்ற நகைச்சுவைக் கலைஞராக விளங்கினார். இவர் பல முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

மலாய் மொழியில் சரளமாக உரையாடக் கூடிய இவர் பல்வேறு  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களை ஏற்று மக்களை மகிழ்வித்துள்ளார்

சிறுநீரக பாதிப்பு காரணமாக இவர்  கடந்த 2018 ஆம் ஆண்டு தனது 63 வது வயதில் பூச்சோங்கில் காலமானார்.

சத்தியா

சிலாங்கூரைச் சேர்ந்த சத்தியாவின் இயற்பெயர் சக்திவேல் பெரியசாமி என்பதாகும். 1985 ஆம் ஆண்டில் தமிழ் கலைநிகழ்ச்சிகளில் நகைச்சுவை கலைஞராக வலம் வந்த இவர், 90 ஆம் ஆண்டுகளில் ஹிபோரான் மிங்கு நிகழ்ச்சியின் மூலம் மலாய் கலைத்துறையில் தடம் பதித்தார். கடந்த 2006 இல் சிறந்த தொலைக்காட்சி கலைஞர் விருதை இவர் பெற்றார்.

சஞ்சய் குமார் பெருமாள்

உள்நாட்டு திரைப்பட உலகில் தவிர்க்கப்பட முடியாத ஒரு நபராக வரும் வருபவர் சஞ்சய் குமார் பெருமாள் ஆவார். இவரது ஜகாட் திரைப்படம் திரைத் துறைக்கு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியதோடு பல விருதுகளையும் தட்டிச் சென்றது.

இத்திரைப்படத்தை இயக்கியதற்காக கடந்த 2016 இல் நடைபெற்ற 28 வது திரைப்பட விழாவில் சிறந்த இளம் இயக்குநருக்கான விருதை சஞ்சய் பெற்றார். அதே ஆண்டின் சிறந்த திரைப்படமாகவும் ஜகாட் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு நகர்ப்பறங்களில் குடியேறிய இந்திய சமூகம் எதிர்நோக்கிய அவலங்களை இப்படம் சித்தரிக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய திரைப்பட விழாவிலும் இத்திரைப்படம் மலேசியாவைப் பிரதிநிதித் து திரையிடப்பட்டது.


Pengarang :