சிலாங்கூர் மக்களின் அயரா உழைப்பு மாநில பொருளாதார வெற்றிக்கு பங்களிப்பை வழங்கியுள்ளது- மந்திரி புசார்

கோலாலம்பூர், நவ 19- சிலாங்கூர் மக்களின் அயரா உழைப்பு மாநிலத்தின்  பொருளாதார வெற்றிக்கு பங்களிப்பை வழங்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காட்டு பங்களிப்பை சிலாங்கூர் மாநிலம் வழங்கியுள்ளதோடு பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் இம்மாநிலத்தை தளமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொலைநோக்கு சிந்தனையும் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையும் கொண்ட சிலாங்கூர் மாநில மக்களின் கடும் உழைப்பு மற்றும் முயற்சி காரணமாக இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது என அவர் சொன்னார்.

இது, சிலாங்கூர் மாநிலத்தின் கலாசாரம் மற்றும் அடையாளத்தின் ஒரு பகுதியாக ஆகியுள்ளது என்று சிப்ஸ் எனப்படும் 2021 சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டில் உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

இந்த கலாசாரமும் சித்தாந்தமும் இந்த பிராந்தியம் முழுமையிலும் அமல்படுத்தப்படுகிறது, ஏ.இ.சி. எனப்படும் ஆசியான் சமூக பொருளாதார ரீதியிலும் இந்த சித்தாந்தம் ஏற்புடையதாக உள்ளது என்றார் அவர்.

எனினும், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிந்தைய யுகத்திற்கு ஏற்ப மாநில மக்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்  சொன்னார்.

இப்போது நாம் ஏற்ற இறக்கம், நிச்சயமற்ற சூழல், சிக்கல், சிரமம் குழப்பமான வர்த்தக, பொருளாதார நிலை போன்றவற்றுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்ற வாழ்க்கையை இனியும் நாம் வாழ்வது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :