பொது முடக்க காலத்தில் மாணவர்களுக்கு 30,000  புத்தகங்கள் விநியோகம்

ஷா ஆலம், நவ 29- சிலாங்கூர் டியூஷன் ராக்யாட் திட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 30,000 வழிகாட்டி புத்தகங்களை சிலாங்கூர் அரசு மாணவர்களுக்கு வழங்கியது.

பள்ளி மூடப்பட்டிருந்த காலக்கட்டத்தில் மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்வதற்கு ஏதுவாக ஆறாம் ஆண்டு மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் டியூஷன் ராக்யாட் திட்டத்தின் கீழ் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு 20,000 புத்தகங்களும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு 10,000 புத்தகங்களும் வழங்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

பள்ளி மூடப்பட்டிருந்த காலத்தில் பாடங்களை படிப்பதற்கு இந்த புத்தகங்கள் பெரும் பயனாக இருந்துள்ளது மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மூலம் தெரிய வந்துள்ளது. இணையம் மற்றும் மின் உபகரண வசதிகள் இருந்த போதிலும் மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் பெரிதும் உதவி புரிந்துள்ளன என்றார் அவர்.

செபிந்தாஸ் எனப்படும் சிலாங்கூர் அடிப்படை தொழில்நுட்ப இரவல் திட்டம் குறித்து கருத்துரைத்த மந்திரி புசார், சிலாங்கூர் பொது நூலகத்திடமிருந்து பெறப்பட்ட இத்திட்டம்  பல்வேறு மாற்றங்களுடன் அமல்படுத்தப்பட்டுள்ளதாக சொன்னார்.

மாணவர்கள் குறிப்பாக  பி40 தரப்பினருக்கு கணினி மற்றும் இதர உபகரணங்களை வழங்கும் முறையை மேம்படுத்தும் நோக்கிலான இத்திட்டதை மாநில அரசு அமல்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :