கிள்ளான், தாமான் சொந்தோசாவை சார்ந்த ஷர்வானீசுக்கு ஐ-சீட் உதவி

கிள்ளான், டிச  6 ;- கிள்ளான், தாமான் சொந்தோசாவை சார்ந்த ஷர்வானீஸ் 24 வயதான இளம் தொழில் முனைவோர், அவர் தனது வீட்டிற்கு அருகில் கடந்த 3 ஆண்டுகளாக பர்கர் உணவு விற்பனை செய்கிறார். இது ஒரு பகுதிநேர  வியாபாரம், வேலை முடிந்து மதியம் பர்கர் கடை நடத்துகிறார்.

அவர்  உழைப்பில் ஆர்வமும் விடாமுயற்சியும் கொண்டவர் மட்டுமின்றி, அவரது பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளுக்கும் நல்ல வாழ்வளிக்கும் பொறுப்பு தனக்குள்ளதை எண்ணி பொறுப்போடு செயல்படும்  இளைஞர்.

தனது வியாபாரத்தை இன்னும்  சிறப்பாக செய்ய தன்னிடம் போதிய வசதியின்மை குறித்து அப்பகுதி கெஅடிலான் இளைஞர் பகுதி  தலைவர் ஜஸ்டின் ராஜூடன் பகிர்ந்து கொண்டதால், சிலாங்கூர்  ஐ- சீட்  முலமாக  உதவி பெற ஆலோசனை கிடைத்ததாக கூறினார்.

அதன்படி அப்பகுதி இந்திய கிராம தலைவர் திரு. தங்கராஜூவின்  உதவியுடன்  கிள்ளான்  வட்டார ஐ – சீட் தொடர்பு  அதிகாரி கண்மணி வழி தொழில் மேம்பாட்டுக்கான உபகரணங்களுக்கு விண்ணப்பித்ததாக கூறினார்.

சுமார்  3200 வெள்ளிகள் பெருமானமுள்ள கேஸ் கிரில் செட் மற்றும்  டிப் பிராயர்  என்னும் பொரியல் சாதனமும் சிலாங்கூர் ஐ – சீட்டிடமிருந்து பெற்றதாக கூறினார் ஷர்வானீஸ்.

இந்த உபகரணத்தை பெற்றுக் கொள்வதன் மூலம் பர்கர்களுக்கு மேலதிகமாக ஏனைய உணவு வகைகளையும் வழங்கி வருமானத்தை அதிகரிக்க முடியும் .

சுபாங் மாநகராட்சி மன்ற உறுப்பினரான திரு ஜஸ்டின் ராஜ் மற்றும் ஶ்ரீ செந்தோசா இந்திய சமூகத்தின் தலைவரான திரு தங்கராஜ் ஆகியோருக்கு தனது நன்றியை   தெரிவித்துக் கொண்டார்  ஷர்வானீஸ்.

ஷர்வானீஸ் எதிர்காலத்தில் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவராக இருப்பார் என்பதில் ஐ-சீட் மிகவும் பெருமையாகவும் நம்பிக்கையுடன் உள்ளதாக  i-SEED யூனிட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளர், டிக்காம் லூர்து  கூறினார்.


Pengarang :