ECONOMY

மனம் தளர வேண்டாம், உத்வேகத்துடன் மீண்டெழுவோம்- மந்திரி புசாரின் புத்தாண்டு வாழ்த்து

ஷா ஆலம், ஜன 1- இக்கட்டான சூழலில் ஒரு போதும் மனந்தளராமல் இன்னல்களிலிருந்து புதிய உத்வேகத்துடன் மீண்டுடெழுவோம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.

இன்று பிறந்துள்ள 2022 ஆம் ஆண்டை முன்னிட்டு சிலாங்கூர் மாநில மக்களுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2022ல் விடியல் விரைவில் உதயமாகும். ஒவ்வொரு புதிய ஆண்டிலும், நமக்கு மட்டுமல்ல, நம் குடும்பம், நண்பர்கள் மற்றும் நம் தேசத்துக்கும் நல்ல நாட்கள் வரும் என்ற நம்பிக்கையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

எனவே புதிய தீர்மானம் மற்றும் உறுதியுடன் நாம் நம்மை மேம்படுத்த முயல்வோம். தோல்வி ஒரு விருப்பமல்ல என்பதால் எல்லா சுய சந்தேகங்களிலிருந்தும் விடுபடுவோம். நாம் தடுமாறும் பட்சத்தில் அந்த தடுமாற்றத்திலிருந்து மீண்டெழுவோம் என அவர் சொன்னர்.

2021  ஆம் ஆண்டின் இறுதி அத்தியாயத்தில் சிலாங்கூர் கசப்பான அனுபவத்தை எதிர்கொண்டது. மாநிலத்தின் பல பகுதிகளை மூழ்கடித்த வெள்ளம்  பல வருட கடின உழைப்பையும் நினைவார்த்த அடையாளங்களையும்  முழு வீடுகளையும், விலைமதிப்பற்ற உயிர்களையும் பறித்துக் கொண்டது.

விமர்சனங்கள் எங்கள் மீது வீசப்பட்டாலும்  நாங்கள் மனவுறுதியோடு  பணிகளை முன்னெடுத்துச் சென்றோம். சருமத்தின் நிறத்தைப் பொருட்படுத்தாமல் ஒற்றுமையாக ஒன்றிணைந்தால் மலேசிய மக்களாகிய எங்களின் பலத்தை  யாராலும் நிராகரிக்க முடியாது என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.

நமது துணிச்சலான தன்னார்வலர்களும் அரசு ஊழியர்களும் உண்மையான தோழமை உணர்வோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர்.  நிச்சயமற்ற சூழலும்  உடலை உருக்கும் அவர்களின் உழைப்பும் வெளிப்படுத்திய நற்குணங்களும்  துன்பங்களைச் சந்திக்கும் போது வேறுபாடுகளை விரட்டியடிக்க முடியுமா என்ற சந்தேகத்தை அகற்றியது என அவர் குறிப்பிட்டார்.

உதவி வழங்குவதற்கான அவசரத்தில், எங்களால் எப்போதும் சிறந்ததை வழங்க முடியவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எங்கள் தரப்பில் உள்ள குறைபாடுகளுக்கு  காரணம் காட்ட விரும்பவில்லை. ஆனால் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவோம் என உறுதியளிக்கிறேன் என்று அவர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

 


Pengarang :