இந்திய சமூத் தலைவரை அறிவோம்- எல். பரணிதரன் ( சுபாங் ஜெயா தொகுதி)

சிலாங்கூரில் நகர்ப்புறத் தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் சுபாங் ஜெயா தொகுதிக்கான இந்திய சமூகத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார் ஜசெக பிரதிநிதியான எல்.பரணிதரன்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சமூகப் பணிகளில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டுள்ள இவர், தொகுதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மக்கள் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வினைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சுபாங் ஜெயா தொகுதிக்கான சமூகத் தலைவராக இவ்வாண்டில்தான் தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் கோவிட்-19 போன்ற இக்கட்டான காலக்கட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த அளவு உதவிகளை வழங்கியுள்ளதாக பரணிதரன் குறிப்பிட்டார்.

கோவிட்-19 காலக்கட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகிக்கும் பணியை பல்வேறு தரப்பினருடன் இணைந்து நான்கு மாதங்களுக்கு தொடச்சியாக மேற்கொண்டோம். இத்திட்டத்தின் மூலம் மூவினங்களையும் சேர்ந்த சுமார் 2,500 பேர் பயன்பெற்றனர்.

சுபாங் ஜெயா பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் மூலம் கிடைத்த தீபாவளி பலகாரத் தயாரிப்பு பொருள்களை 50 பேருக்கு வழங்கினோம். சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷெல் இங் மூலம் 25 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கும் நிகழ்வை பிஜேஎஸ் 9, ஸ்ரீ சாமூண்டேஸ்வரி ஆலயத்தில் நடத்தினோம்.

இது தவிர, சுபாங்  நாடாளுமன்றத் தொகுதி ஏற்பாட்டில் பிஜேஎஸ் 7 சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற மித்ரா உதவித் திட்ட நிகழ்வில் 50 குடும்பங்களு.க்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்று அவர் கூறினார்.

தீபாவளியை முன்னிட்டு கோலப் போட்டியை தாங்கள் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இதில்  40 பேர் பங்கேற்றனர். வீடுகளில் போடப்பட்ட கோலத்தை நீதிபதிகள் நேரில் சென்று கண்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். சுபாங் பெரேட் பேரங்காடியில் நடைபெற்ற நிகழ்வில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசும் மேலும் 25 பேருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது என்றார் அவர்.

ஐ-சீட் திட்டத்தின் கீழ் சுபாங் ஜெயா தொகுதியைச் சேர்ந்த நால்வருக்கு வர்த்தக உபகரணங்கள் கிடைக்கப்பெற்றதோடு சித்தம் அமைப்பின் ஏற்பாட்டில் இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட மசாலை தூள் தயாரிக்கும் பயிற்சியில் 25 பெண்கள் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.


Pengarang :