ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் இரங்கல்

புதுடில்லி, பிப் 5 - அண்மையில் மலேசியாவில்  ஏற்பட்ட வெள்ளம் மற்றும் டோங்காவில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தவர்களை நினைவுக் கூறும் வகையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.

மலேசியாவில் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு ராஜ்யசபா (மாநிலங்களவை) புதன்கிழமை “ஆழ்ந்த வருத்தத்தை” தெரிவித்ததாக கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் நேற்று தெரிவித்தது.

 அந்த இயற்கைப் பேரிடரில் உயரிழந்த  மலேசிய மக்களுக்கு இரங்கல் மற்றும் ஆழ்ந்த அனுதாபத்தை மேல் சபை தெரிவித்துக் கொண்டது.

“மாண்புமிகு உறுப்பினர்களே, 2021 டிசம்பர் 17 மற்றும் 19 ஆம் தேதிக்கு இடையில் மலேசியா கடுமையான அடைமழையால் பாதிக்கப்பட்டது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. மலேசியாவில் நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளச் சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்” என்று இந்திய துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான எம். வெங்கையா நாயுடு கடந்த புதன்கிழமை தெரிவித்ததாக அவைக் குறிப்பு கூறுகிறது.

முன்பு எப்போதும் இல்லாத வெள்ளம் மக்களின் சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்று நாயுடு மேலும் கூறியுள்ளார்.

ஜனவரி மாதம் டோங்காவில் நிகழ்ந்த எரிமலைக் குமுறல் மற்றும் மலேசிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் உறுப்பினர்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

நடப்பு மற்றும் முன்னாள் அவை உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் அல்லது உயிர் இழப்புகள் சம்பந்தப்பட்ட  சோக நிகழ்வுகளுக்கு இரங்கல் தெரிவிப்பது இந்திய சட்டமன்றத்தின் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றாகும்.

Pengarang :