அதிக விலையில் கோழி விற்பனை- மூன்று மொத்த வியாபாரிகளுக்கு அபராதம்

ஷா ஆலம், பிப் 6- உச்ச வரம்பு விலையைக் காட்டிலும் அதிக விலையில் கோழிகளை விற்பனை செய்த மூன்று மொத்த  வணிகர்களுக்கு உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு 
அபராதம் விதித்தது.

கிலோ வெ.8.90 சில்லறை விலையில் விற்க வேண்டிய கோழி சில சந்தைகளில் வெ.9.30 விலையில் விற்கப்படுவது பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் இயக்குநர் முகமது ஜிக்ரில் அஸான் அப்துல்லா கூறினார்.
 கிள்ளான், பூச்சோங் மற்றும் காஜாங்கில் உள்ள மொத்த விற்பனையாளர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் அரசாங்கம் நிர்ணயித்த கிலோ வெ.7.60 விலையை விட கூடுதல் விலையில் கோழியை விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட மொத்த வியாபாரிகளுக்கு 2011 ஆம் கொள்ளை லாப தடுப்புச் சட்டம் மற்றும் 1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தலா 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்றார் அவர்.

அந்த மொத்த வியாபாரிகளில் இருவர் கோழியை மொத்த விற்பனை செய்வதற்கான உரிமத்தைக் கொண்டிராதது இச்சோதனையில் தெரியவந்ததாகவும் இதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தவறிழைக்கும் வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை கீழ்க்கண்ட வழிகளில் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

i. Whatsapp 019-279 4317
ii. Portal e-aduan.kpdnhep
iii. Call Centre 1-800-886-800
iv. Emel [email protected]
v. Ez ADU KPDNHEP
vi. Bilik Gerakan KPDNHEP Selangor 03-5514 4393/5518 1810/ 5512 5485

Pengarang :