HEALTHNATIONAL

பேராக்கில் 3,000 ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

ஈப்போ, ஏப் 13- பேராக்கின் இரு மாவட்டங்களில் வர்த்தக ரீதியாக செயல்படும் மூன்று பண்ணைகளில் உள்ள சுமார் 3,000 பன்றிகள் ஏ.எஸ்.எஃப். எனப்படும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

ஹிலிர் பேராக் மாவட்டத்திலுள்ள ஒரு பண்ணையில் கடந்த மாதம் 27 ஆம் தேதியும் பாத்தாங் பாடாங் மாவட்டத்திலுள்ள இரு பண்ணைகளில் இம்மாதம் 4 ஆம் தேதியும் மேற்கொள்ளப்பட்ட ஆர்.டி.-பிசிஆர் சோதனையில் அப்பன்றிகளுக்கு நோய்த் தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக பேராக் மாநில தோட்ட, விவசாயம் மற்றும் உணவுத் தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரஸ்மான் ஜக்காரியா கூறினார்.

இதனைத் தொடர்ந்து 1953 ஆம் ஆண்டு விலங்கு சட்டத்தின் 18(3) வது பிரிவின் கீழ் தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பண்ணை உரிமையாளர்கள் பன்றிகளை அல்லது இறந்த பன்றிகளின் உடல்களை வேறு இடத்திற்கு கொண்டுச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பண்ணைகள் இருக்கும் இடத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள பண்ணைகளிலும் நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவச் சோதனையின் முடிவுகள் வரும்வரை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்த நோய்த் தொற்று இதர இடங்களுக்கும் பரவாமலிருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :