MEDIA STATEMENTNATIONAL

ஓப் செலாமாட் இயக்கம்- மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் அதிக மரணங்கள்

கோலாலம்பூர், மே 8- இவ்வாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட 18வது ஓப் செலாமாட் இயக்கத்தின் போது நிகழ்ந்த சாலை விபத்துகளில் மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் அதில் பயணம் செய்தோரே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சாலை பாதுகாப்பு இயக்க காலத்தில் மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் அவர்களுடன் பயணம் செய்தவர்கள் சம்பந்தப்பட்ட 88 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ ரிசாருடின் ஹூசேன் கூறினார்.

இதர வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் 44 பேர் பலியான வேளையில் பாதசாரிகள் எண்மரும் சைக்கிளோட்டி ஒருவரும் விபத்துகளில் உயிரிழந்தனர் என அவர் சொன்னார்.

பதினெட்டாவது ஓப் செலாமாட் பாதுகாப்பு இயக்கத்தின் போது மொத்தம் 141 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 135 மரணங்கள் நாடு முழுவதும் உள்ள சாலைகளில் நிகழ்ந்தன என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இக்காலக்கட்டத்தில் நாடு முழுவதும் 12,985 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதோடு பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 257,808 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அவர்  சொன்னார்.

அவற்றில் 194,445 குற்றப்பதிவுகள் முதன்மைக் குற்றங்களாக வகைப்படுத்தப்பட்ட இரட்டைக் கோடுகளில் முந்திச் செல்வது, அவசரத் தடத்தில் பயணிப்பது, சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறிச் செல்வது, வேக வரம்பை மீறுவது, வாகனமோட்டும் போது கைபேசியைப் பயன்படுத்துவது ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டன என்றார் அவர்.


Pengarang :