ECONOMYNATIONALSELANGOR

கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்தது- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

அலோர்ஸ்டார், ஜூன் 26- கட்டுப்பாட்டை இழந்த புரோட்டோன் பெசோனா கார் ஆற்றில் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இத்துயரச் சம்பவம் கோல கெட்டில் ஜம்பத்தான் பந்தாய் சிசாரில் நேற்று மாலை நிகழ்ந்தது.

முப்பத்தேழு வயது பெண்மணியான மஷித்தோ இப்ராஹிம் மற்றும் அவரின் இரு பிள்ளைகளான ஷியாட் ஜிக்ரி ஷாருடின் (வயது 7), முகமது ஷியாட் ஹஷிக் (வயது 5) ஆகியோரே நீரில் மூழ்கிய அம்மூவராவர் என்று பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சம்சுடின் மாமாட் கூறினார்.

மீட்புப் படகின் உதவியுடன் ஐந்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள் காருடன் ஆற்றில் மூழ்கிய அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

நேற்றிரவு வரை அம்மூவரும் கண்டு பிடிக்கப்படவில்லை எனக் கூறிய அவர், இந்த மீட்புப் பணி குறித்த தகவல் அவ்வப்போது வழங்கப்படும் என அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

 இதனிடையே, கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்தது தொடர்பில் தமது துறை நேற்று மாலை 6.42 மணியளவில் தகவல் பெற்றதாக  கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் ஷியுபாட் கமாருன் கூறினார்.

இச்சம்பவம் நிகழ்ந்த போது சுமார் 100 மீட்டர் அகலமும் மூன்று மீட்டர் ஆழமும் கொண்ட அந்த ஆற்றில் நீரோட்டம் வேகமாக இருந்தது. சம்பவத்தை நேரில் கண்ட பொது மக்கள் படகின் மூலம் தேடும் பணியை மேற்கொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்விபத்தில் சிக்கியவர்களை போலீசார் அடையாளம் கண்டு சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து விட்டதாகவும் அவர்  சொன்னார்.


Pengarang :