ANTARABANGSA

குழாய் பழுதுபார்ப்பு பணியின் போது அசம்பாவிதம்- இந்தோ. ஊழியர் இடுப்பு வரை மண்ணில் புதையுண்டார்

சைபர் ஜெயா, ஜூன் 30– குழாய் பழுதுபார்ப்பு பணியை மேற்கொண்டிருந்த இந்தோனேசிய ஆடவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இடுப்பு வரை மண்ணில் புதையுண்டார்.

எனினும், சக ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டு அந்த ஊழியரை மீட்டனர். இச்சம்பவம் இங்குள்ள லாமான் வியு சைபர் ஜெயாவில் நேற்று மாலை நிகழ்ந்தது.

இந்த மண் சரிவு ஏற்பட்ட போது சம்சுல் மாரிப் (வயது 43) என்ற அந்த ஆடவர் 3.04 மீட்டர் ஆழமுள்ள குழியில் குழாய் பழுதுபார்ப்பு பணியை  மேற்கொண்டிருந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து தீயணைப்புக் குழுவினர் மாலை 2.16 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கூறிய அவர், எனினும், தீயணைப்பு குழுவினர் வருவதற்கு முன்னரே சக ஊழியர்கள் அவரை மீட்டு விட்டதாகச் சொன்னார்.

அந்நபருக்கு உடல் காயங்கள் ஏற்பட்டிருந்ததோடு வாயிலும் இரத்தக் கசிவு காணப்பட்டது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு புத்ரா ஜெயா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார் என்று நோராஸாம் குறிப்பிட்டார்.

 


Pengarang :