அந்நிய நாட்டினரை கட்டாயத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தினர்- மூவர் கைது

ஷா ஆலம், ஆக 21- கிள்ளான் வட்டாரத்தில் மூன்று அந்நிய நாட்டினரை கட்டாயத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிள்ளான், பண்டார் பெட்டானிக் 2 பகுதியில கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் முதலாளிகள் என நம்பப்படும் 33 முதல் 67 வயது வரையிலான அம்மூவரும் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் சா ஹூங் ஃபோங் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது 2007 ஆம் ஆண்டு அந்நியத் தொழிலாளர் பதுக்கல் மற்றும் மனித வணிக தடைச் சட்டத்தின் 44 வது பிரிவின் கீழ் 30 முதல் 43 வயது வரையிலான ஏழு பெண்கள் காப்பாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் பண்டார் பொட்டானிக்கிலுள்ள வீடொன்றில் கட்டாயத் தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டது தொடக்க  கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

நிறுவனம் ஒன்றில் துப்புரவுப் பணியாளர்களாக வேலை செய்வதற்கு கொண்டு வரப்பட்ட அந்த ஏழு பெண்களும் அந்நிறுவனத்துடன் முறையான வேலை ஒப்பந்தத்தைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

எனினும், நாட்டிற்கு வந்தப் பின்னர் அவர்கள் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பாலர் பள்ளிகளில் துப்புரவுப் பணியை மேற்கொள்ள  தினமும் அனுப்பப்பட்டதாகவும் முதலாளியின் வீட்டிலேயே தங்குவதற்கும் அவர்கள் நிர்பந்திக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த பெண்களின் கைப்பேசிகள் மற்றும் கடப்பிதழ்கள் பறிக்கப்பட்டு அவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதோடு ஒப்புதல் இன்றி வீட்டை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை என்றார் அவர்.


Pengarang :