Pengerusi Pakatan Harapan (HARAPAN) Datuk Seri Anwar Ibrahim berucap ketika Konvensyen Pakatan Harapan di Pusat Konvensyen Ipoh (ICC), Ipoh pada 20 Oktober 2022. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI

மூன்று துணைப் பிரதமர்கள் பரிந்துரையை முன்பே நாங்கள் முன்வைத்து  விட்டோம்- அன்வார் கூறுகிறார்

ஷா ஆலம், அக் 24- மூன்று துணைப் பிரதமர்கள் நியமனம் தொடர்பான பரிந்துரையை தாங்கள் தொடக்கத்திலேயே முன்வைத்து விட்டதாக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில் இந்த பரிந்துரையின் அமலாக்கம் குறித்து விவாதிக்க தமது கூட்டணி தயாராக உள்ளதாக அவர் சொன்னார்.

இது பக்கத்தான் ராக்யாட் (மக்கள் கூட்டணி) காலத்திலேயே முன்வைக்கப்பட்ட பரிந்துரையாகும். தீபகற்ப மலேசியாவுக்கு ஒருவர், சபாவுக்கு ஒருவர் மற்றும் சரவா மாநிலத்திற்கு ஒருவர் என மூன்று துணைப் பிரதமர்கள் நியமிக்கப்படுவார்கள். இருப்பினும், ஆட்சி மாற்றம் நிகழும் பட்சத்தில் இது குறித்து விவாதிக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

சண்டகானில் நேற்று நடைபெற்ற சபா மாநில நிலையிலான ஹராப்பான் பிரசார பேரணியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வரும் பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி பெற்றால் தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாவுக்கு தலா ஒரு துணைப் பிரதமர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அம்னோ அக்கூட்டணியின் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி நேற்று முன்தினம் கூறியிருந்தது தொடர்பில் அன்வார் இவ்வாறு கருத்துரைத்தார்.

பக்கத்தான் ஹராப்பான்  கூட்டணி மத்திய அரசை கைப்பற்றும் பட்சத்தில் மூன்று துணைப் பிரதமர் பதவிகள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஜசெக தேசியத் தலைவர் லிம் குவான் எங் கடந்த்தாண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Pengarang :