ECONOMY

இலவச நீர் விநியோகத் திட்டம் தொடரும்- பதிவு செய்ய 2024 டிசம்பர் இறுதி வரை வாய்ப்பு

ஷா ஆலம், நவ 26- மாதம் 20 கனமீட்டர் நீரை இலவசமாக வழங்க வகை செய்யும் டாருள் ஏசான் நீர் விநியோகத் திட்டம் 4 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் அடுத்தாண்டிலும் தொடரப்படும்.

இந்த சலுகையைப் பெறுவதற்கான வருமான வரம்பும் கடந்த அக்டோபர் 1 தேதி தொடங்கி  4,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று, மந்தமான பொருளாதாரம், பணவீக்கம் போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த குடிநீர் சலுகையைப் பெறுவதற்கான வருமான  வரம்பு தளர்த்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.

வருமான இழப்பு, வருமானக் குறைவு மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைப்பதில் இந்த திட்டம் துணைப்புரியும் என்று அவர் மேலும்  தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை மாநிலத்திலுள்ள சுமார் 300,000 பேர் இலவச குடிநீர் சேவையை அனுபவித்து வருகின்றனர். இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு வரும் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


Pengarang :