ECONOMYSELANGOR

கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு புத்துயிரூட்ட வெ.70 லட்சம் ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 26– கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்ட மீட்பு நிதியில்
(தெப்பாட்) தற்போது எஞ்சியிருக்கும் 6 கோடியே 98 லட்சம் வெள்ளித்
தொகை கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்குப் புத்துயிரூட்டும்
பணிகளுக்காக அடுத்தாண்டில் பயன்படுத்தப்படும்.

கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்குப் புத்துயிரூட்டுவதன் மூலம்
சொந்த வீட்டைப் பெறுவதற்காக காத்திருக்கும் வீடு வாங்கியோரின்
கனவை நனவாக்கவும் மாநிலத்தில் கைவிடப்பட்ட வீடமைப்புத்
திட்டங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் இயலும் என்று மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதுவரை 274 வீடுகளை உள்ளடக்கிய இரு வீடமைப்புத் திட்டங்கள் இந்த
நிதியைக் கொண்டு புத்துயிரூட்டப்பட்டுள்ளன என்று மாநில
சட்டமன்றத்தில் நேற்று 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தைத் தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.

கோல சிலாங்கூர், தாமான் டேசா மாவார் வீடமைப்புத் திட்டம் 63
லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி செலவிலும் உலு சிலாங்கூர் கம்போங்
கோஸ்கான் திட்டம் 46 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி செலவிலும்
மறுநிர்மாணிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

ஊராட்சி மன்றங்களால் அடையாளம் காணப்படும் வீடமைப்புத்
திட்டங்களுக்குப் புத்துயிரூட்டும் மற்றும் அடிப்படை வசதிகளை
மேம்படுத்தும் பணிக்குத் தெப்பாட் நிதியில் எஞ்சியிருக்கும் தொகை
பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

ஷா ஆலம் மாநகர் மன்ற பகுதியில் உள்ள இரு கைவிடப்பட்ட
வீடமைப்புத் திட்டங்களுக்குப் புத்துயிரூட்ட 20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு
செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :