ECONOMY

மாநிலத்தின் பொருளாதாரம் உத்வேகம் பெற அன்வாரின் நியமனம் துணைப்புரியும்- மந்திரி புசார்

ஷா ஆலம், நவ 26- மாநிலத்தின் பொருளாதாரம் உத்வேகம் பெறுவதற்கும்
பொதுமக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுவதற்கும் பிரதமர் பதவிக்கு
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நியமனம் பெரிதும் துணைப்புரியும்.
அன்வாரின் நியமனம் மாநிலத்தில் குறிப்பாக சுற்றுலா, வீடமைப்பு, கல்வி,
சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நேர் மறையான விளைவுகளை
ஏற்படுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அன்வாரின் நியமனம் நிச்சயம் சிலாங்கூருக்குப் பேருதவியாக அமையும்.
மத்திய அரசின் உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்படக் கூடிய மலிவு
விலை வீடமைப்புத் திட்டங்களில் பல சீரமைப்புகளை மேற்கொள்ள
இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

நோயாளிகளின் நோய்ப் பின்னணி தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய
செலங்கா செயலி மற்றும் ஹாயாட் ஆவணப்பதிவு முறை போன்ற
மாநில அரசின் தொழில்நுட்ப வசதிகள் மத்திய அரசு நிலையிலும்
விரிவுபடுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர்
சொன்னார்.

ஒருவரின் உடல் நிலை தொடர்பான பின்னணியை இயங்கலை வாயிலாக
அறிந்து கொள்வதற்குரியத் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. நிர்வாக
நடைமுறை சிக்கல்கள் இன்றி இந்த நடைமுறையை கூட்டரசு
நிலையிலும் ஒருங்கிணைக்க இயலும் என்றார் அவர்.

நாட்டின் பத்தாவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மாட்சிமை
தங்கிய பேரரசர் முன்னிலையில் நேற்று முன்தினம் பதவி உறுதி மொழி
எடுத்துக் கொண்டார்.


Pengarang :