ALAM SEKITAR & CUACA

தாமான் முத்தியாரா புக்கிட் ராஜாவில் வெள்ள நீர் சேகரிப்பு குள நிர்மாணிப்பு 2024இல் பூர்த்தியாகும்

ஷா ஆலம், டிச 1- இங்குள்ள தாமான் முத்தியாரா புக்கிட் ராஜாவில்
மேற்கொள்ளப்படும் வெள்ள நீர் சேகரிப்பு குள நிர்மாணிப்பு பணிகள் வரும்
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முற்றுப் பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதி மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்நோக்கி வரும் வெள்ளப்
பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கிலான இந்த வெள்ளத் தடுப்புத் திட்டம்
கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கப்பட்டதாகத் கோத்தா
அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இத்திட்டத்தை அமல்படுத்துவதற்குக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடி
வந்தேன். மாநில சட்டமன்றத்திலும் இவ்விவகாரத்தை எழுப்பினேன். அந்த
போராட்டத்தின் பலனாகத் தாமான் முத்தியாரா புக்கிட் ராஜாவில் வெள்ளத்
தடுப்புத் திட்டத்தை அமல்படுத்தும் கனவு நனவாகியுள்ளது என அவர்
தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் துணை நின்ற மாநில அரசுக்கும் அரசு
துறைகளுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்
குறிப்பிட்டார்.

தனது வார்த்தைக்கு மதிப்பளித்து கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொறுமை
காத்து வந்த தாமான் முத்தியாரா புக்கிட் ராஜா குடியிருப்பாளர்களுக்கும்
அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :