ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர், பேராக்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஷா ஆலம், டிச 1- சிலாங்கூர் மற்றும் பேராக்கில் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றிரவு
8.00 மணி நிலவரப்படி இவ்விரு மாநிலங்களில் உள்ள ஐந்து துயர்
துடைப்பு மையங்களில் 145 குடும்பங்களைச் சேர்ந்த 510 பேர் அடைக்கலம்
நாடியுள்ளனர்.

சிலாங்கூரில் 195 பேரும் பேராக்கில் 315 பேரும் வெள்ளத் துயர் துடைப்பு
மையங்களில் தங்கியுள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்
(நட்மா) தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இவ்விரு மாநிலங்களிலும் மூன்று மாவட்டங்கள் இன்னும் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காகச்
சிலாங்கூரில் மூன்று துயர் துடைப்பு மையங்களும் பேராக்கில் இரு
மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை 4.00 மணி நிலவரப்படி பேராக் மற்றும் சிலாங்கூரில் 116
குடும்பங்களைச் சேர்ந்த 402 பேர் நான்கு துயர் துடைப்பு மையங்களில்
தங்கியிருந்தனர்.

இதனிடையே, உலு சிலாங்கூரிலுள்ளச் சுங்கை பெர்ணம் மற்றும் கோல
லங்காட்டிலுள்ளச் சுங்கை லங்காட் ஆகியவை அபாயக் கட்டத்தில்
உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளிலும் புத்ராஜெயா, கோலாலம்பூர்,
பெர்லிஸ், கெடா, பினாங்கு, நெகிரி செம்பிலான், ஜோகூர் ஆகிய
மாநிலங்களிலும் இன்று மாலை தொடங்கி இரவு வரை இடியுடன் கூடிய
கனத்த மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை
கணித்துள்ளது.


Pengarang :