SUKANKINI

1995ஆம் ஆண்டு சிலாங்கூர் கால்பந்து குழுவினருக்குச் சிலாங்கூர் இடாமான் வீடுகள்

ஷா ஆலம், டிச 8- மலேசியக் கிண்ணத்தைக் கடந்த 1995ஆம் ஆண்டில்
வென்றதற்கு வெகுமதியாக சுமார் இரண்டரை லட்சம் வெள்ளி
பெறுமானமுள்ளச் சிலாங்கூர் கூ இடாமான் வீடுகளை சிலாங்கூர்
அணியின் விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 26 பேர்
சுமார் 30 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின்னர் இப்போது பெற்றுள்ளனர்.

உலு லங்காட், காஜாங் 2, பத்து 18, பங்சாபுரி இடாமான் அபாடி
அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள அந்த வீடுகளுக்கான குலுக்கல் மற்றும்
ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு இன்று இங்குள்ள மாநில அரசு
தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில்
முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 250,000 வெள்ளி மதிப்பிலான
இந்த வீடுகளுக்கான சாவி அடுத்தாண்டு தொடக்கத்தில் சம்பந்தப்பட்ட
விளையாட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்று ரோட்சியா சொன்னார்.

அந்த விளையாட்டாளர்களுக்கு நிலம் வழங்கப்படும் என அப்போதைய
மாநில அரசு வழங்கியிருந்த வாக்குறுதிக்கு மாற்றாக 1,022 சதுர அடி
பரப்பளவு கொண்ட வீடுகளை வழங்க மாநில அரசு முன்வந்ததாக அவர்
தெரிவித்தார்.

மலேசியக் கிண்ணத்தை வென்ற ஆட்டக்காரர்களுக்குத் தலா ஒரு ஏக்கர்
நிலம் வழங்கப்படும் என அப்போதைய மந்திரி புசார் டான்ஸ்ரீ முகமது
முகமது தாயிப் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால்
அவ்விளையாட்டாளர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை மாநில அரசு
உணர்ந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 1995ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி ஷா ஆலம் அரங்கில்
நடைபெற்ற மலேசியக் கிண்ண இறுதியாட்டத்தில் பகாங் குழுவை 1-0 என்ற
கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர்
கிண்ணத்தைச் சிலாங்கூர் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 28வது முறையாகக் கிண்ணத்தை வென்ற குழு என்ற பெருமையையும் சிலாங்கூர் பெற்றது.


Pengarang :