ALAM SEKITAR & CUACASELANGOR

குப்பைகளைப் பிரிக்கும் திட்டத்தை வீட்டிலிருந்து தொடங்கச் சிலாங்கூர் அரசு திட்டம்

ஷா ஆலம், டிச 9- குப்பைகளை பொருள்வாரியாக பிரித்தெடுக்கும்
திட்டத்தை வீட்டிலிருந்து தொடங்குவது மீதான பரிந்துரை அடுத்த மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இங் ஸீ ஹானுடன் முன்கூட்டியை விவாதிக்க வேண்டியுள்ளதாக சுற்றுசூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் தெரிவித்தார்.

இந்த உத்தேசத் திட்டம் கடினமானதாகவும் சவால்மிக்கதாகவும் இருந்தாலும் இத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் அது மறுசுழற்சி ரீதியாக பெரும் பலனைத் தரும் என அவர் குறிப்பிட்டார்.

வாரந்தோறும் லோரிகள் மூலம் குப்பைகளை அகற்றுவது மற்றும் குப்பைகளை பொருள்வாரியாகப் பிரிப்பதற்காக குப்பைத் தொட்டிகளை தயார் செய்வது போன்ற பணிகளைத் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளதால் அதற்கான செலவினமும் அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என்றார் அவர்.

இது எளிதாக அமல்படுத்தக்கூடிய ஒரு திட்டமல்ல. இருந்த போதிலும் எதிர்காலத்தில் நாங்கள் இத்திட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம். ஆயினும், குப்பைகளை அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது மிக அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள செக்சன் யு13இல் சமூக மறுசுழற்சி மையத் திறப்பு விழா
மற்றும் 5ஆர் திட்ட விழாவுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஷா ஆலம் டத்தோ பண்டார் டாக்டர் நோர் ஃபுவாட் அப்துல் ஹமிட்டும் கலந்து கொண்டார்.

கோலாலம்பூர், புத்ராஜெயா, பகாங், ஜொகூர், மலாக்கா, நெகிரி
செம்பிலான், பகாங், பெர்லிஸ், கெடா ஆகிய மாநிலங்களில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை பொருள்வாரியாக பிரிப்பதை கட்டாயமாக்கும் நடைமுறையை கூட்டரசு அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி அமல்படுத்தியது.


Pengarang :