SELANGOR

சிலாங்கூர் சுல்தான் பிறந்த நாளை முன்னிட்டு 104 பேர் விருது மற்றும் பதக்கங்களைப் பெறுகின்றனர்

ஷா ஆலம், டிச 10- மேன்மை தங்கியச் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் 77வது பிறந்த நாளைக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 104 பேருக்கு உயரிய விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.

விருது பெறுவோரில் 24 பேர் “டத்தோ ஸ்ரீ“ மற்றும் “டத்தோ“ உள்ளிட்ட உயரிய விருதுகளை பெறுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகச் சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் கூறினார்.

ஆண்களுக்கு “டத்தோஸ்ரீ“  அந்தஸ்தையும் பெண்களுக்கு “டத்தின் படுகா ஸ்ரீ“ அந்தஸ்தையும் வழங்கும் ஸ்ரீ படுகா மக்கோத்தா சிலாங்கூர் (எஸ்.பி.எம்.எஸ்.) எனும் உயரிய விருது இம்முறை இருவருக்கு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 டத்தோ செத்தியா அந்தஸ்து கொண்ட சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா (எஸ்.எஸ்.ஐ.எஸ்.) விருதை ஒருவர் பெறும் வேளையில்  பத்து பேருக்கு டத்தோ அந்தஸ்து கொண்ட டத்தோ படுகா மக்கோத்தா சிலாங்கூர் (டி.பி.எம்.எஸ்.) விருது வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் 11 பேர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா (டி.எஸ்.ஐ.எஸ்.) எனும் டத்தோ விருதையும் பெண்கள் டத்தின் படுகா விருதையும் பெறுகின்றனர்.

விருது பெறும் அனைவரும் அரச மலேசியப் போலீஸ் படை, மலேசிய திவால் இலாகா மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இந்த  விருதுகளுக்குப்  பரிந்துரைக்கப் பட்டனர் என்றும் டத்தோ ஹரிஸ் காசிம் தெரிவித்தார்.


Pengarang :