ALAM SEKITAR & CUACA

வெள்ள அபாயம்- தயார் நிலையில் ஷா ஆலம், கிள்ளான் ஊராட்சி மன்றங்கள்

ஷா ஆலம், டிச 12- கனமழை தொடரும் பட்சத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சாத்தியத்தை  எதிர்கொள்ள ஷா ஆலம் மாநகர் மன்றமும்  (எம்.பி.எஸ்.ஏ.) கிள்ளான் 
நகராண்மைக்  கழகமும் (எம்.பி.கே) தயாராகி வருகின்றன.

"பந்தாஸ்" எனப்படும் துரித   பணிக்குழுவின்  நடவடிக்கை அறையை தாங்கள் திறந்திருப்பதாகவும்  24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த அறையை பொதுமக்கள் 03-55105811 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்பு அதிகாரி ஷாரின் அகமது தெரிவித்தார்.

வெள்ள அபாயம் உள்ள இடங்களை தாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருவதோடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கான  தற்காலிக நிவாரண மையங்களையும்  அடையாளம் கண்டு வருவதாக  கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட பணிகளில் நில மற்றும் மாவட்ட அலுவலகம், காவல்துறை, தீயணைப்புப் படை மற்றும் சமூக நலத்துறை போன்ற அமைப்புகளுடன் தாங்கள் ஒத்துழைப்பை நல்கி வருவதாக அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

இதனிடையே, வெள்ளம் ஏற்படும் படசத்தில் விரைந்து செயல்படுவதற்காக நகராண்மைக் கழகப் பணியாளர்கள், அமலாக்க அதிகாரிகள், பந்தாஸ் விரைவு பணிப்படையினர் உள்பட 146 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் வர்த்தக தொடர்புப் பிரிவு இயக்குநர் நோர்பிஸா மாஹ்பிஷ் தெரிவித்தார்.

இந்த உறுப்பினர்கள் கடந்த 8ஆம் தேதி வெள்ள மீட்பு மற்றும் படகுகளைக் கையாள்வது தொடர்பான பயிற்சியை மேற்கொண்டதாகவும் அவர் சொன்னார்.

சிப்பாங், கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை தேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.


Pengarang :