ALAM SEKITAR & CUACA

சுற்றுச் சூழலுக்கு மாசுபாடு- செப்பு உருக்காலை மீது கிள்ளான் நகராண்மைக் கழகம் நடவடிக்கை

காப்பார், டிச 13- குடியிருப்புப் பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு மாசு
ஏற்படுவதாகப் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காப்பார், தாமான் டேசா
பைடுரி பகுதியில் செயல்பட்டு வரும் செப்பு உருக்காலைக்கு எதிராக
கிள்ளான் நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரிகள் இன்று சோதனை
மேற்கொண்டனர்.

கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் செயலாளர் எல்யா மரினி டார்மின்
தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு அதிரடிச் சோதனையில்
லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரிய அதிகாரிகளும் பங்கு
கொண்டனர்.

இந்த தொழிற்சாலையினால் சுற்றுவட்டாரக் குடியிருப்பாளர்கள்
கடுமையான தூய்மைக்கேட்டுப் பிரச்சனையை எதிர்நோக்கி வருவதோடு
அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக நம்பப்படும்
எண்ணெய்க் கழிவுகள் அருகிலுள்ள கால்வாய்களில் நிரம்பிக்
காணப்பட்டதாக நகராண்மைக் கழகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

தொழிற்சாலையின் எண்ணெய் சேமிப்புக் கிடங்கை முறையாக
பராமரிக்கத் தவறியதற்காக அந்த தொழிற்சாலைக்கு 2007ஆம் ஆண்டு
கிள்ளான் நகராண்மைக் கழகத் துணைச் சட்டத்தின் கீழ் குற்றப்பதிவு
வெளியிடப்பட்டதாக அது தெரிவித்தது.

நகராண்மைக் கழகத்தின் பொறியில் துறை மற்றும் நகர திட்டமிடல்
துறை அத்தொழிற்சாலை மீது தொடர் நடவடிக்கைகளை
மேற்கொள்ளவுள்ளதோடு அங்குள்ள கால்வாய்களைத் சுத்தம் செய்யும்
பணியைச் சுற்றுச் சூழல் சேவைத் துறை விரைவில் மேற்கொள்ளும்
என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.


Pengarang :