SELANGOR

மேருவில் அந்நிய நாட்டினரின் வியாபார மையங்கள் மீது அதிரடிச் சோதனை- பொருள்கள் பறிமுதல்

கிள்ளான், டிச 14- இங்குள்ள மேரு நகரில் அந்நிய நாட்டினர்
சட்டவிரோதமாக நடத்தி வரும் வணிக மையங்களுக்கு எதிராக கிள்ளான்
நகராண்மைக் கழகம் நேற்று முன்தினம் அதிரடிச் சோதனை
மேற்கொண்டது.

ஜாலான் முவாஃபாகாட்,1, தாமான் டத்தோ பண்டார், மற்றும் ஜாலான்
மெராந்தி ஆஃப் ஜாலான் மேரு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட
இந்நடவடிக்கையில் ஆறு கடைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக
நகராண்மைக் கழகம் கூறியது.

உணவகங்களாகவும், மதுபான விற்பனை விற்பனை மையங்களாகவும்,
பொழுது போக்கு மையங்களாகவும் செயல்பட்டு வந்த அந்த மையங்களில்
ஐந்து கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் முறையான அனுமதியைக்
கொண்டிருக்கவில்லை என அது அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த கடைகளுக்கு எதிராக 2007ஆம் ஆண்டு கிள்ளான் நகராண்மைக் கழகத்
துணைச் சட்டத்தின் 3(1)வது பிரிவின் கீழ் சீல் வைப்பு மற்றும் பொருள்
பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நகராண்மைக் கழகம்
குறிப்பிட்டது.

வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் துணையுடன்
மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் மேரு சட்டமன்ற உறுப்பினர்
ஃபக்ருள்ராஸி முகமது மொக்தாரும் கலந்து கொண்டார்.

இதனிடையே, மேரு வட்டாரத்தில் வீடுகளை கடைகளாக மாற்றிய அந்நிய
நாட்டினருக்கு எதிரான மற்றொரு சோதனை நடவடிக்கையை கிள்ளான்
நகராண்மைக் கழகம் மேற்கொண்டது.

அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் மதுபான விற்பனையை இலக்காக
கொண்ட இந்த நடவடிக்கையில் ஒன்பது கடைகள் சோதனை
செய்யப்பட்டன. அவற்றில் எட்டு கடைகள் அனுமதியின்றி செயல்பட்டது
கண்டு பிடிக்கப்பட்டதோடு ஒரு கடை மூடப்பட்டிருந்தது.

அக்கடைகளுக்கு எதிராக 2007ஆம் ஆண்டு கிள்ளான் நகராண்மைக் கழக
துணைச் சட்டத்தின் 3(1)வது பிரிவின் கீழ் சீல் வைப்பு மற்றும் பொருள்
பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


Pengarang :