NATIONAL

பத்து பூத்தே தீவு மீதான கோரிக்கையை மறுஆய்வு செய்ய சட்டத் துறைத் தலைவருக்குப் பிரதமர் உத்தரவு

புத்ராஜெயா, டிச 14- சிங்கப்பூர் அரசாங்கத்துடன் விரைவாகவும்
ஆக்கப்பூர்வமான முறையிலும் விவாதம் நடத்துவதற்கு ஏதுவாக பத்து
பூத்தே தீவு கோரிக்கை விவகாரம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்
என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இரு வழி உறவில்
பாதிப்பு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை
அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.

அனைத்துலக நீதிமன்றத்தால் சிங்கப்பூர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள பத்து
பூத்தே தீவு மீதான சர்ச்சைக்குரியக் கோரிக்கை விவகாரம் மற்றும்
அதனால் ஏற்பட்டுள்ள எதிர்விளைவுகள் குறித்து விளக்கமளிக்கும்படி
சட்டத் துறைத் தலைவரை (டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருண்) தாம்
பணித்துள்ளதாக அவர் கூறினார்.

சிங்கப்பூர் அரசாங்கத்துடன் ஆக்ககரமான முறையில் விவாதம்
நடத்தப்படுவதற்கு ஏதுவாக இவ்விவகாரம் மீது மீண்டும் கவனம் செலுத்த
வேண்டும் என நான் வலியுறுத்தியுள்ளேன் என்றார் அவர்.

பத்து பூத்தே, பத்துவான் தெங்கா மற்றும் பத்துவான் செலத்தான்
இறையாண்மை விவகாரம் தொடர்பில் அனைத்துலக நீதிமன்றத்தில் சட்ட
நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த
அக்டோபர் மாதம் 13ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :