ECONOMY

அனிஸ் சிறப்பு உதவித் திட்டத்தின் வழி 372 பேர் பயன் பெற்றனர்

ஷா ஆலம், டிச 14- இவ்வாண்டு ஜனவரி முதல் இன்று வரை அனிஸ்
எனப்படும் பிரத்தியேகச் சிறார்களுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் வழி
372 பேர் பலனடைந்துள்ளனர்.

இந்நோக்கத்திற்காக அக்காலக்கட்டத்தில் 756,770 வெள்ளி
செலவிடப்பட்டதாக மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

மொத்தம் 303 பேர் 605,750 வெள்ளியை கல்வி உதவி நிதியாக பெற்ற
வேளையில் மேலும் 69 பேருக்கு 151,020 வெள்ளி மதிப்பிலான
உபகரணங்களும் பொருள்களும் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பிரத்தியேகச் சிறார்களுக்கான சிறப்பு உதவித்
திட்டம் அமல்படுத்தப்பட்டு இவ்வாண்டோடு ஐந்து ஆண்டுகள்
பூர்த்தியடைகின்றன என்று அவர் தெரிவித்தார்.

பிரத்தியேகச் சிறார்களைப் பராமரிப்பதில் பெற்றோர்களுக்கும்
பராமரிப்பாளர்களுக்கும் ஏற்படும் நிதிச் சுமையை மாநில அரசு நன்கு
உணர்ந்துள்ளது. இத்தகைய சிறார்களுக்கு பிரத்தியேகக் கல்வி, சிகிச்சை,
சார்பு உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு அதிகம் செலவிட
வேண்டியுள்ளது என்றார் அவர்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இன்று அனிஸ் சிறப்பு
உதவிகளை வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் 41 பேர்
மாநில அரசிடமிருந்து உதவி பெற்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,500 பேர் இந்த அனிஸ்
திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளதாக சித்தி மரியா குறிப்பிட்டார்.


Pengarang :