ALAM SEKITAR & CUACA

ஐந்து மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ள அபாயம்- ஜே.பி.எஸ். எச்சரிக்கை

கோலாலம்பூர், டிச 15- புயல் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் பட்சத்தில் ஜொகூர், கெடா, பகாங், பேராக், பினாங்கு ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தேசிய வெள்ள முன்கணிப்பு மற்றும் எச்சரிக்கை மையமும் வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையும் எச்சரித்துள்ளன.

ஜோகூர் மாநிலத்திலுள்ள கோத்தா திங்கி, மெர்சிங், மூவார் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக தேசிய வெள்ள முன்கணிப்பு மற்றும் எச்சரிக்கை மையம்  கூறியது.

கெடா மாநிலத்தின் பண்டார் பாரு மாவட்டத்திலுள்ள பெக்கான் லுபோக் புந்தார், சுங்கை கிச்சில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளதாக அது தெரிவித்தது.

பகாங் மாநிலத்தில் குவாந்தான், மாரான், பெக்கான், ரொம்பின் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராக் மாநிலத்தை பொறுத்தவரை ஹிலிர் பேராக், கிரியான், லாருட், மாத்தாங், செலாமா மற்றும் பேராக் தெங்கா ஆகியவை வெள்ள அபாயம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை மாவட்டம், நிபோங் திபால் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பை எதிர்நோக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கண்ட பகுதிகள் வெள்ள அபாயத்தை எதிர் நோக்குவதற்கான சாத்தியம் உள்ளதால் எந்நேரமும்  விழிப்புடனும் தயார் நிலையிலும் இருக்கும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.


Pengarang :