SELANGOR

சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை 632 சம்மன்கள் வழங்கியுள்ளது

கோலாலம்பூர், டிச 15: சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) நேற்றிரவு இங்குள்ள அவான் பெசார் டோல் பிளாசாவில் (புக்கிட் ஜாலிலை நோக்கி) இரண்டு மணி நேரச் சோதனை நடவடிக்கையில் பல்வேறு சாலை விதி மீறல்களுக்கு 632 சம்மன் நோட்டீஸ்களை வழங்கியுள்ளன.

மொத்தம், 498 சம்மன் நோட்டீஸ் களில் ஐந்து முக்கிய குற்றங்கள் அடங்கும், அதாவது போக்குவரத்து விளக்குகளுக்கு கீழ்ப்படியத் தவறியது, அவசரப் பாதையில் வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி யைப் பயன்படுத்துதல், இரட்டைக் கோடுகளைக் கடத்தல் மற்றும் வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுதல் ஆகியவையாகும் என மலேசியாவின் ஜேபிஜே அமலாக்கத்தின் மூத்த இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.

மொத்தச் சம்மன் நோட்டீஸ் களில் 34 நோட்டீஸ்கள் வாகனப் பயன்பாட்டைத் தடை செய்வதற்கான நோட்டீஸ்களும், 81 வாகனத் தணிக்கை நோட்டீஸ்களும், 10 எடை நோட்டீஸ்களும் மற்றும் 9 நோட்டீஸ்கள் ஆறு மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய வாகனங்களை ஜப்தி செய்வதற்கும் ஆகும் என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையில் மொத்தம் 1,122 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 401 வாகனங்கள் மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும், சுற்றுச்சூழல் துறை (டிஓஇ) 15 வாகனங்களை ஆய்வு செய்ததில் எட்டு வாகனங்களில் அதிக அளவிலான சத்தம் கேட்டதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் சுங்கச்சாவடியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதற்கிடையில், அந்நடவடிக்கையில் அடையாள ஆவண சிக்கல்கள் காரணமாக எட்டு மியான்மர் பிரஜைகள், இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் தலா ஒரு இந்திய மற்றும் இந்தோனேசியப் பிரஜைகளை கைது செய்துள்ளோம் என்றார்.

சியாபு மற்றும் கஞ்சா வகை போதைப்பொருள் துஷ்பிரயோக வழக்குகளில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் ஆறு நபர்களைத் தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் (AADK) கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.

 

– பெர்னாமா


Pengarang :